வாழ்க்கையை நாம் எப்படிப்பார்க்கிறோம் என்பதே கேள்வி. வாழ்க்கையை ‘கடுமையான போட்டியின் வழியாக உலகியல் வெற்றியை ஈட்டி மகிழ்ச்சியுடன் வாழவேண்டிய ஒரு களம்’ என நீங்கள் வகுத்துக்கொண்டிருந்தால் எந்த பள்ளியில் அதிக மதிப்பெண் எடுக்கச்செய்கிறார்களோ அதுவே உங்கள் தேர்வு.
மாறாக வாழ்க்கை என்பது பலவகையான மகிழ்ச்சிகளின் களம் என நீங்கள் புரிந்துகொண்டிருந்தீர்கள் என்றால், கண்டடைதலும் வளர்ச்சி பெறுதலும் இன்பங்களில் தலையாயவை என நினைத்தீர்கள் என்றால் உங்கள் தெரிவு பிறிதொன்றாகவே இருக்கும்.
ஒரு குழந்தைக்கு ஒரேயொரு இளமைப்பருவம்தான். அதன் உற்சாகத்தையும் விளையாட்டையும் தானாக கற்றுக்கொள்வதன் பேரின்பத்தையும் அது தன் எதிர்காலத்தின் பொருட்டு முழுமையாகவே தியாகம் செய்யவேண்டும் என்றால் அது எத்தனை முட்டாள்தனம்? அந்த எதிர்காலமோ என்னவென்றே தெரியாத ஒன்று. அப்படிக்கற்றால் எதிர்காலம் வெற்றியாகும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அப்படி கல்லாதவர்கள் அதே வெற்றியை அடையமாட்டார்கள் என்றும் சொல்லமுடியாது.
நம் பதற்றத்துக்காக , நாம் வாழ்ந்த கடந்தகால வாழ்க்கையில் இருந்த நெருக்கடிகள் அளித்த பயத்திற்காக, நாம் நம் குழந்தைகளை பலிகொடுக்கிறோம் என்பதே என் எண்ணம். ஆனால் நான் இதைச் சொல்லமுடியாது. ‘பாருங்க, பக்கத்துவீட்டுப்பையன் இருபத்தஞ்சு வயசிலே அமெரிக்காவிலே அஞ்சுலட்சம் சம்பாரிக்கிறான். நம்ம புள்ளையும் அங்க போகணும்’ என நம் மனம் ஓடுமென்றால் அதற்கான கல்வியே உகந்தது.
இன்னொரு வழி குழந்தைகளின் மகிழ்ச்சி, படைப்பூக்கம் ஆகியவை குறையாமல் அளிக்கப்படும் கல்வி. அதில் அக்குழந்தை தன் வாழ்க்கைவழியை தானே தேர்ந்துகொள்ளும் என்னும் ‘அபாயம்’ உள்ளது அதில் நிச்சயவெற்றிகள் இல்லை. உலகியல் வெற்றிகள் அடையப்படாது போகலாம். பக்கத்துவீட்டுக்காரர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியிருக்கலாம்.. அதற்கு தயாராக இருந்தால் அவ்வழியை தேர்வுசெய்யலாம்.