கோயம்புத்தூர் குமார் சண்முகத்தின் இளைய குழந்தை இனியா. அவள் வசிக்கும் தெருவில் நாலைந்து சிறு நாய்கள் அலைகிறது. அவைகளில் ஒன்றுக்கு இனியா ‘ப்ரவ்னி’ என பெயர் வைத்திருக்கிறாள். ப்ரவ்னி என அவள் குட்டிக்குரலால் கூப்பிடும்பொழுது வாலைஆட்டி குலைந்துகொண்டே அவளிடம் வருகிறது அந்நாய்க்குட்டி.
கையில் வைத்திருக்கும் லாலிபப் மிட்டாயை ஒருதடவை தான் நக்கிவிட்டு, நாயிடம் நீட்டுகிறாள். அதுவும் ஒருதடவை மிட்டாயை நக்கிச்சுவைக்கிறது. மீண்டும் இனியா சுவைக்கிறாள். மீண்டும் புரவ்னி சுவைக்கிறது. இப்படியே மாறிமாறிநீள்கிறது அவர்களிருவரின் மிட்டாய் சுவைத்தல். ச்சீ… என்பதும், அய்யய்ய… என்பதும் அவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. இனியாவைப் பொறுத்தவரை அது புரவ்னியின் தெரு. புரவ்னியைப் பொறுத்தவரை அது இனியாவின் தெரு.
காலையில் இக்காட்சியை நெஞ்சுப்பதிந்த அன்று மாலையே ஜான்சுந்தர் அண்ணா வீடு. நெருக்கமான சிற்றறை, அங்கிருக்கும் மாதா படத்திற்கு அண்ணனுடைய அம்மா தொடுத்த ஜாதிமுல்லை பூச்சரத்தை வைத்திருந்தார்கள். அரும்பு அவிழா செவ்வெள்ளை மொட்டுகள் அத்தனையும். வீட்டுக்கு வந்திருந்த பெண்பிள்ளைகளுக்கும் கொஞ்சம் பூ சூடத்தரப்பட்டது.
இரவுணவு நேரம். வட்டமிட்டு எல்லோரும் அமர்ந்திருக்க, பைபிளை எடுத்துவந்து மடியில்வைத்து வாசிக்கத் துவங்குகிறாள் ஜான்சுந்தர் அண்ணனின் மகள் சிறுமி ரோஜா. சங்கீதவசனங்கள் மனக்கனத்தைக் கரைக்கிறது.
எல்லோர் கண்களும் இறுகமூடியிருக்கும் கணத்தில், ரோஜாவின் அம்மா ஒரு பிரார்த்தனையை உச்சரித்தார்கள், “பாதுகாப்பான கூரை எங்களுக்கு, கொட்டும் மழையில் சாலையோரங்களில் தவிக்கும் சனங்களுக்கு இந்த வானமே பாதுகாப்புக் கூரையாகுக ஆண்டவரே… குழந்தை இல்லாத ஏழைத்தாயின் வயிற்றில் நீயே குமாரனாக வந்து இன்றிரவு ஜெனியும் ஆண்டவரே…”
ஏதோவொருவகையில் குழந்தையற்ற தாயையும், வாழிடமற்ற எளியமக்களையும்… உண்ணும் உணவு தொண்டைக்குழி இறங்குவதற்கு முன்பு நினைக்கச்செய்யும் ஒரு மன்றாடுதல் தான் வாழ்வின் சத்தியக்குரலாக உள்ளெதிரொலிக்கிறது.
நனவுமனத்தின் தூண்டலற்ற இனியாவின் மிட்டாய் அன்பைப்போல, துயருரும் மனத்தின் நோய்க்காக கண்ணீர்கசியும் கடவுள்குரல் போல… இந்த வாழ்வையும் பூமியையும் இன்னுமின்னும் நேசிக்கச் சொல்லித்தரும் குழந்தைகளின் பரிசுத்தத்தை தொழுதுவணங்கி… தும்பி 19வது இதழ் அச்சுக்குச் செல்கிறது.