வாணி அக்கா, தனது மகன் ஹிரித்திக்-க்கு தும்பியின் பதினைந்தாவது கதையான ‘ஜாஸ்மின்’ பூனைக்கதையை சொல்லிக்கொண்டிருக்கிறார். கதைப்படி பூனை ஒரு பூட்டிய வீட்டுக்குள் மாட்டிக்கொள்கிறது. வெளியில்வர வழிதெரியாத அப்பூனை தன் நகங்களால் கதவைக் கீறுகிறது. இப்படி ஒவ்வொன்றாக காட்சியைச் சித்தரிக்கையில் , திடீரென இடைமறித்து ஹிரித்திக் சொல்கிறான், “இதுக்குதாம்மா… ஒரு யானைய வளக்கனும். இந்த இடத்துல யான மட்டும் இருந்துச்சுனா டமால்ன்னு கதவ உடச்சு பூனைய காப்பாத்தி இருக்கும்!”
ஒருகணம் நின்று யோசித்துவிட்டு “சரிசரி மிச்ச கதைய கேளு” என வாணி அக்கா சொல்ல வாயெடுக்கையில், “போதும்மா… அதான் யான வந்து கதவ உடச்சு ஜாஸ்மின் பூனைய காப்பாத்திடுச்சு. ஜாஸ்மினும் ஓடிவந்து யானைய கட்டிப்பிடிச்சு தாங்க்ஸ் சொல்லிடுச்சு… அவ்ளோதான்… கத முடிஞ்சிடுச்சு” என சத்தம்போட்டு சொல்லிக்கொண்டே விளையாடப் போய்விடுகிறான் வீதியில்.
யானையை வளர்ப்பு மிருகமாக வீட்டில் வைத்து வளர்க்கும் கனவு எல்லா குழந்தைகளின் மனதிலும் அடர்ந்திருக்கிறது. நிஜக்கதையில் இல்லாத, அல்லது சாத்தியப்படாத ஒரு முடிவை, ஒரு திசைதிருப்பலை வெகுலாவகமாக ஒரு குழந்தை தானறிந்த வார்த்தைகளுக்குள் சொல்லிவிடுகிறது.
நெளிந்து போகும் பாம்பை நீளமான தவழும் பலூனாக ஒரு மழலை கற்பனைத்துக்கொள்வதன் அற்புதம்…
தர்க்கச் சிந்தனைகளின் எல்லா வாசலுக்கும் அப்பாலானதுதான். யதி சொல்வதுபோல ‘இடுகுறிப்பெயர்களின் பின்னான காரணங்களை குழந்தை மனதே முதலில் அறிகிறது. காரணம், அதன் கனவு கசடற்றது’
தும்பி 19வது இதழ், இருட்டைக் கண்டு அஞ்சும் ஒரு ஆந்தைக்குஞ்சின் கதையை அச்சுசுமந்து வந்திருக்கிறது. கதையின் முடிவில் வற்புறுத்தலற்ற ஒரு அறம் இயல்பாக அமையவிரும்பும்…
சின்னஞ்சிறிய மனதுகளின் குழந்தமையையும் தன்னொளியையும் இறகுநுனியளவு வருடிவிட முடிந்தால்போதும், ஒரு கதைபுத்தகமாக இதை உருப்படுத்தும் மொத்த மனிதர்களின் உழைப்பும் அர்த்தப்பட்டுவிடும். அந்த எளிய கரிசனத்தை அகம்தேக்கி நகர்கிறோம், சதையழிந்து விதையெழும் என்கிற தீர்க்கத்தில்…